இரத்தினசபாபதி ஆற்றிய உரை

இலங்கைப் பாராளுமன்றத்தில், ஈழவர் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களின் பிரவேசத்தின் பின் 21.07.89 அன்று சபையில் ஈரோஸ் நிலைப்பாடு பற்றி இரத்தினசபாபதி ஆற்றிய உரை


பேரன்புமிகு சபாநாயகர் அவர்களே! மதிப்புக்குரிய சக பாராளுமன்ற அங்கத்தவர்களே!


எமது உறுப்பினர்களது சத்திய பிரமாணத்தின் பின்னர் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேசுவதற்கு சந்தர்ப்பமளித்தமைக்காக முதற்கண் எமது கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த பொதுத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் தற்போது மேற்கொள்ளும் இந்த நாடாளுமன்ற பிரவேசத்தின் நோக்கம் பற்றியும், நாடாளுமன்றத்தில் நாம் மேற்கொள்ள இருக்கும் ஈடுபாட்டின் எல்லை வரையறை பற்றியும் எமது பிரதிநிதித்துவத்தின் வீச்செல்லை பற்றியும் இன்றைய தினத்தில் பேசுவதற்காக நான் எனது கட்சியின் சார்பில் பணிக்கப்பட்டுள்ளேன்.


அத்துடன் இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை மையமிட்டு இலங்கை இந்திய அரசுகள் கடைப்பிடித்து வரும் போக்கு குறித்து எமது கட்சி கொண்டுள்ள நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவும் நான் பணிக்கப்பட்டுள்ளேன்.


எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாடாளுமன்றத்தை தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையுள்ள சபையாக நாம் கருதவில்லை. இந்த நாடாளுமன்றத்தில் மொத்தமாக உள்ள 225 ஆசனங்களில் ஏறத்தாழ 30 ஆசனங்களே தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதித்துவத்திற்குரிய ஆகக்கூடிய ஆசனங்களாக மட்டுப் படுத்தப்பட்டுள்ளன.


இந்த வகையில் பார்க்கும்போது 8:1 என்ற விகிதத்தில் விளங்கும் விகதாசாரத்தை வைத்துக்கொண்டு சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானம் இயற்றும் வழிமுறையுடைய இச்சபையில் தமிழ்த்தேசிய இனமானது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தீர்மானம் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் உடையதாக இங்கு இருக்கு முடியாது.


இனப்பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள சூழ்நிலையில் அதனைத் தீர்ப்பதற்கு எந்தப் பொறிமுறையும் இந்த நாடாளுமன்றத்தில் இல்லாத காரணத்தினாலேயே இச்சபையை நாம் ஆற்றலற்ற சபையாகக் கருத வேண்டியுள்ளது.


அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே நாடு முழுவதிலும் இராணுவச் சூழ்நிலை நிலவும்போது நாடாளுமன்றத்திற்குள் மட்டும் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க முயல்வது பொருத்தமற்ற செயலாகக் காணப்படுவதாலும் நாம் இந்த நாடாளுமன்றம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையற்றதென்ற முடிவுக்கே வந்துள்ளோம்.


ஆயினும் இந்தச் சபையின் பிரதிநிதித்துவத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரமும் மக்கள் வழங்கும் அந்தஸ்தும் இன்னமும் இருப்பதனாலேயே இச்சபையில் நாம் பிரதிநிதிகளாக அங்கத்துவம் பெற முன்வந்துள்ளோம்.


எம்மைப் பொறுத்தவரை இந்த ஒரு பிரசார மேடையே - நாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளையும் அதற்காக நாம் முன்வைத்துச் செயற்படும் தீர்வுகளையும் இங்கு நாம் அவசியம் ஏற்படும்போது எடுத்துச் சொல்வோம்.


இந்த அவையின் அமர்வுகளில் கலந்துகொள்வது குறித்து நாம் சில எல்லை வரையறைகளை கொண்டுள்ளோம். வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவர்களது அபிலாஷைகளையும் இங்கு நாம் பிரதிபலிப்போம்.


அத்துடன் தேசிய ரீதியில் எழும் விடயங்களில் பிரச்சினைகளின் தன்மை கருதியே நாம் ஈடுபாடு கொள்வோம் - சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இங்கு எழும் விவாதங்களில் அணிசேராக் கொள்கையை அனுசரித்தே எமது பங்களிப்பானது அமையப் பெறும். மேலும் இந்த அவையில் மூன்றாவது பெரும்பான்மை பலத்தில் இருக்கும் நாம் எந்த அணியையும் சார்ந்து நிற்கப் போவதில்லை என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இவையே எமது நாடாளுமன்ற ஈடுபாட்டின் எல்லை வரையறை பற்றி எமது கட்சி கொண்டுள்ள தீர்மானங்களாகும்.


ஈழவர் ஜனநாயக முன்னணியின் அங்கத்தவர்களாக விளங்கும் 13 சுயேட்சை உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்த மக்களின் சார்பாக இங்கு குரல் எழுப்புவார்கள்.


இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.


இலங்கை வாழ் மக்களுக்கு வாக்குரிமை கிடைக்கப் பெற்ற முதலாவது பொதுதத் தேர்தல் நடைபெற்றபோது மலையகத்தில் இருந்து 7 பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


ஆனால் பிரஜாவுரிமைச் சட்டம் 1948-இல் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 10 இலட்சம் மலையக மக்கள் வாக்குரிமை இழந்ததன் விளைவாக கூடுதலாக நியமன உறுப்பினர்களே மலையக மக்களின் சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளனர்.


இம்மக்களுக்கு மீண்டும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதன் பின்பு நடைபெற்ற 1989 பொதுத்தேர்தலில் ஒரு உறுப்பினர் தானும் மலையகத்தில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.


மலையக மக்களின் ஏகப் பிரதிநிதியாக வர்ணிக்கப்படும் அமைச்சர் தொண்டமான் கூட தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டவரே.


தமிழ் பேசும் மக்களின் ஒரு சாராரான மலையக மக்களுக்கு நேர்ந்துள்ள நிர்க்கதியை கருத்தில் கொண்டு எமது பிரதிநிதித்துவத்தில் மலையகம் சார்பான பிரதிநிதித்துவம் இடம்பெற்றுள்ளது.


1989 பொதுத் தேர்தல் வழங்கிய பிரதிநிதித்துவத்தின் இன்னொரு அம்சத்தையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்.


கடந்த 1977 பொதுத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பலம் பெற்று இந் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கிய த.ஐ.வி. கூட்டணியானது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இப்பொதுத்தேர்தலில் ஒரு ஆசனங்களைக்கூடப் பெற முடியாது போக முற்றிலும் புதிய முகங்கள் இந்த அவைக்கு வந்துள்ளனர்.


ஒரு தசாப்த காலத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இருந்து "பழையன கழிதலும், புதியன புகுதலுமான நிலை" ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்தப் பிரதிநிதித்துவமானது ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்து உருவானது என்பதையும், இன்னமும் இந்தப் புலத்தையே சார்ந்துள்ளதென்பதையும் இங்கு பிரத்தியேகமாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.


இவற்றின் அடிப்படையில் இன்றைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த அவையின் விவாதப் பொருளாக உள்ள அவசரகால நிலைமை சம்பந்தமாகவும் எமது அரசியல் நிலைப்பாடு குறித்தான விடயத்திற்கும் வருகிறேன்.


இன்றைய இந்த அவசரகால விதிகளைப் பார்க்கும்போது 1979-ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்குக்கு அமுலாகிய இதே வகை சட்டங்கள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. இராணுவத் துறையினரைத் தட்டிக் கேட்க முடியாதபடி முழு அளவில் வழங்கப்படும் அதிகாரங்களின் தொகுப்பே இச்சட்டங்களாகும்.


ஏறத்தாழ 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் பிரயோகித்து வரும் இச்சட்டங்களால் அரசுக்கும் இப்பகுதிக்கும் இடையிலான உறவு விரிசல் அடைந்து போனதைத் தவிர வேறெதையும் இவை சாதிக்கவில்லை.


இவ்வகைச் சட்டங்களின் பாதிப்புகளில் இருந்தே நாம் உருவாகியவர்கள் என்ற வகையில் இவற்றுpன் மோசமான விளைவுகள் பற்றிப் பேசுவதற்கு நாம் போதிய அனுபவம் பெற்றவர்களாகியுள்ளோம்.


இவ்வகை விதிமுறைகள் வடக்கு கிழக்கு நிலைமைகளைப் போல் தென்பகுதி நிலைமைகளையும் மோசமான நிலைக்கு இட்டு வந்துவிடுமென எச்சரிக்கை செய்கிறோம்.


கடந்த காலங்களில் நடந்ததைப்போல் இளைஞர்கள் துப்பாக்கி தாங்கிப் போராட்டம் நடத்துவதை வெறும் கிளர்ச்சியென குறுகிய எல்லைக்குள் எடை போட்டு கிளர்ச்சி அடக்கும் பணிகளுக்காக முப்படைகளையும் முடுக்கி விடுவதால் எதுவித வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.


பதிலாக அரசானது தன்னை இராணுவ ரீதியாகத் தறகாப்பு நிலையொன்றினை நோக்கிப் பலப்படுத்திய வண்ணம் உண்மையான அடிப்படைப் பிரச்சினை என்னவென்பதை அரசியல் ரீதியில் அணுகினால் மட்டுமே காரியார்த்தமான முடிவுகளுக்கு இட்டு வர முடியும்.


இதை விடுத்து பிரச்சினைகளின் தோற்றுவாய் எது என்பதை அறிந்து அணுகாவிடில் எதிர்காலம் சூனியமாகிவிடும்.


நாடு முழுவதிலும் நிலவும் குழப்பமும், நெருக்கடியும் மிகுந்த சூழ்நிலையில் இதன் தோற்றுவாய்களை இச்சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்வதென்பது அவசியமானதென்றே கருதுகிறேன்.


இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.


இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.


நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.


இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.


இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது.


இதற்கு முன் 1956-இல் இயற்றப்பட்ட தனிச் சிங்க சட்டமானது தமிழ்பேசும் மக்களின் நடுத்தர வர்க்கத்தாரை நிலை குலையச் செய்திருந்தது.


இக்காலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாணக் குடியேற்றத் திட்டங்கள் அங்கு வாழ்ந்த தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எதிர்ப்புகளைக் கிளறிவிட்டன.


இவற்றுக்குப் பின்னர் 1970-களில் இயற்றப்பட்ட இனவாரித் தரப்படுத்தலானது தமிழ்பேசும் இளைஞர்களது எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியது. இதனால் கிளர்ச்சி மனப்பான்மை இளைஞர்கள் மட்டத்தில் உருவாக, அதை அடக்கப் போவதாகக் கூறி 1979-இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.


காலகதியில் இச்சட்டம் இனம் முழுவதுக்குமான அச்சுறுத்தலாகிப் போனது.


இவ்வாறு 1948 முதல் படிப்படியாக இயற்றப்பட்ட சட்டங்களுக்கெல்லாம் உச்சமாக விளங்கியதுதான் 1983-இல் இயற்றப்பட்ட ஆறாவது திருத்தச் சட்டம். இது அகிம்சை மார்க்கத்தைச் சார்ந்து நின்ற ஜனநாயக வழிமுறை நின்று செயற்பட்டு வந்த த.ஐ.வி.கூ. முதலான சக்திகளுக்குத் தொடர்ந்து இயங்க முடியாத வண்ணம் ஆப்பு வைத்தது.


இச்சட்ட மூலத்தை இன்னமும் நீக்க மறுப்பதானது இனவாதத்தின் வெளிப்பாடுகள் இன்னமும் அப்படியே நீறுபூத்ததாக இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.


அதுமட்டுமல்லாமல் எம்மைப் போன்றவர்களின் தொடர்ந்த ஜனநாயகச் செயற்பாடுகளுக்கும் அது உறுத்தலாகவே விளங்குகிறது.


1983-இல் இயற்றப்பட்ட ஆறாவது திருத்தச் சட்டம் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக வழிமுறைகளுக்குத் தடை விதித்தது போலவே இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட தென்பகுதி இடதுசாரிகளுக்கான தடை விதிப்பானது தென்பகுதி அரசியலிலும் குழப்பங்களுக்கு அடிகோலியது.


இதன் பின்பே ஜே.வி.பி. உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் மீண்டும் தலைமறைவாகி மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினர்.


இவற்றுடன் கூடவே வெளியுறவுக் கொள்கையில் 1983 முதல் அமெரிக்கச் சார்புப் போக்கைத் தீவிரப்படுத்தியதும் இந்தியா அச்சமடையத் தொடங்கி இலங்கை விவகாரத்தில் கூடிய தலையீடு செய்யத் தொடங்கியது.


இலங்கையில் கொழுந்து விட்டெரிந்த இனவாதம் இந்தியாவுக்கு வாய்ப்பான கருவியாகப் பயன்படத் தொடங்கியது.


இந்தத் தவறுகளின் விளை பயன்களே இன்றைய நெருக்கடியாக வடிவமெடுத்தன. பிராந்திய பாதுகாப்பைத் தேடமுனையும் இந்திய அரசு ஒருபுறமும் தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தேடும் விடுதலை இயக்கங்கள் மறுபுறமும் இலங்கை அரசைக் கைப்பற்ற முனையும் தென்பகுதிச் சக்திகள் இன்னொரு புறமுமாக முக்கோண வியூகம் அமைத்து இலங்கை அரசைச் சூழ்ந்து நிற்கிறது.


இந்த மும்முனைகளையும் எதிர்கொள்வதென்றே கூறிக்கொண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராக இலங்கை அராணுவத்தை உஷார் படுத்துவதும், வடக்கு கிழக்கில் பாதுகாப்பை மீண்டும் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முனைவதும், தென்பகுதி நிலைமைகளை அடக்குவதற்காக முப்படைகளையும் ஏவிவிடப்படுவதென்பதும் தவறான அணுகுமுறைகளாகும்.


இராஜதந்திர அணுகுமுறைகளுக்கும் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கும் அப்பால் இராணுவ பலத்தைப் பிரயோகித்து எதிர்கொள்வதற்கு முயற்சிப்பது இன்றைய சூழலில் ஆபத்தானது. பிரச்சினைகளின் தோற்றுவாய்களை புரிந்து பரிகாரம் காணாவிட்டால் இலங்கையின் இறைமை விரைவில் அகால மரணமடைந்துவிடும்.


இந்த விவகாரங்களில் இந்திய அரசுடன் மேற்கொள்ள வேண்டிய உறவு நிலை குறித்தும் வடக்கு கிழக்கில் நிலவும் புதிய சூழ்நிலைகளைக் கையாள்வது குறித்தும் எமது கருத்தைத் தெரிவித்து இவ்வுரையை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


இலங்கை அரசை எதிர்நோக்கியுள்ள தற்போதைய முக்கிய நெருக்கடி இந்தியாவுடனான உறவுநிலை பற்றியதாகும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடானது அதனது பிராந்தியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே விளங்குகின்றது என்பது வெளிப்படையானது.


இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து மேற்கொள்ளப்பட்ட விடயங்களைக் கணக்கில் கொண்டு இந்தியாவுடனான உறவு நிலைகளை இலங்கை அரசு சீர்செய்ய வேண்டும்.


1970-களில் ரோகண விஜேவீரவின் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சியை அடக்க அன்றைய அரசு இந்திய இராணுவத்தை வரவழைத்திருந்தது.


இங்கு வந்த இந்திய இராணுவம் அந்த அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாமதமின்றி வெளியேறியும் இருந்தது. ஆனால் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு அமைவாக இலங்கை இராணுவத்திற்கு வலுச் சேர்க்கும் இராணுவமாக அழைக்கப்பட்ட இந்திய இராணுவமானது திரும்பிச் செல்வதில் காட்டுகின்ற தயக்கமானது இந்த அரசு கொண்டுள்ள சர்வதேசக் கொள்கைகளின் போக்காலயே விளைந்துள்ளது.


இதனைக் கருத்திற்கொண்டு பிராந்திய நலனை முன்னிட்டு இலங்கை அரசு இராஜதந்திர முறைகளிலேயே இவ்விடயத்தை அணுகுதல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.


இரு அரசுகளும் தமக்குள்ளே ஏட்டிக்குப் போட்டியாக முரண்பட்டுக் கொள்வதை விடுத்து ஓர் இணக்கமான நிலைமைக்கு வந்து இந்திய இராணுவத்தைக் கட்டம் கட்டமாக வெளியேற்றுவதற்கு ஒரு கால அட்டவணையைத் தயாரித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.


இதற்கேதுவாக இந்திய இராணுவம் நிரந்தர யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்துவதுடன் கேந்திர ஸ்தானங்களில் மட்டும் நிலை கொண்டிருத்தல் வேண்டும்.


தமிழ்பேசும் மக்களின் போராட்ட சக்திகளாக விளங்கும் விடுதலை இயக்கங்களில் ஈடுபாடு இல்லாமல் இரு அரசுகளுக்கும் இடையே அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும்.


இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு வந்த இந்திய அமைதி காப்புப் படையும், இந்திய அரசின் பக்க துணையோடு நிறுவப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையும் சர்ச்சைக்குரிய விடயங்களாகப் போய்விட்டன.


இந்த விடயங்களில் கையொப்பமிட்ட இரு அரசுகளுமே தற்போது இவ் விவகாரங்களில் முரண்பட்டு நிற்கின்றன. இதனாலேயே இவ்வொப்பந்தம் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை இயக்கங்களுக்கும் இடையே வடக்கு - கிழக்கில் யுத்தம் நிகழ்ந்து வந்த வேளையில் அமைதியை நிலைநாட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தியப் படைகள் இலங்கை அரசின் பணிப்பிற்கிணங்க 1987 அக்டோபர் 10 முதல் வடக்கு - கிழக்கில் யுத்தத்தில் குதித்தன.


ஆயுதக் களைவின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த யுத்தச் சூழ்நிலையானது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே நடுநிலை தவறிப்போன இந்திய அமைதி காப்புப் படையை ஆயதக் களைவை நிறுத்தி நிரந்தர யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.


மாகாண சபையைப் பொறுத்த வரையில் அது தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாக அமையப் பெறுவதற்குப் பதிலாக பழிவாங்கல்களுக்கு தளம் அமைத்ததாகவே போயுள்ளது.


வடக்கு - கிழக்கில் இம்மாகாணச் சபைத் தேர்தலுக்குப் பின் பழிவாங்கும் அரசியலே மேலோங்கி நிற்கிறது. இது வடக்கு - கிழக்கில் அமைதியை நாடி நின்ற மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டது.


இவ்வேளையில் எமது இயக்க உறுப்பினர்கள் மீது ஒப்பந்தத்தின் பின் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள் பற்றி சில வார்த்தைகள் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.


இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது இது இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது எனவும், தமிழ் மக்களுக்குத் தீர்வெதையும் தரவில்லையெனவும் தெளிவுபடுத்தியிருந்த நாம் அதன் அமுலாக்கத்திற்கு வன்முறை மூலம் தடையேதும் கொடுக்க மாட்டோம் என்பதற்கு உத்தரவாதமாக திருப்திகரமான முறையில் ஆயுத ஒப்படைப்பினைச் செய்திருந்தோம்.


இன்றுவரை எமது பல உறுப்பினர்களின் இழப்புகளின் மத்தியிலும் இம்முடிவகை; கடைப்பிடித்தே வருகிறோம். ஆயினும் எமது தோழர்கள் நிராயுதபாணிகளாக இருக்கும் நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு சில இயக்கங்கள் மர்மமான முறையில் எமது உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கடத்திக் கொன்று வருகின்றனர்.


இதுவரையில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இக்கொலைகளில் பெரிதும் சம்பந்தப்பட்டவர்கள் மாகாண சபை உருவாக்கத்தில் பின் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.


நிராயுதபாணிகளாக உள்ள எமது உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி போலவே வடக்கு - கிழக்கில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு நேர்ந்து வருகிறதென்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.


வடக்கு - கிழக்கில் தற்போது ஆயுதக் களைவு என்பது இராணுவ வன்முறையாகவும், மாகாண சபையென்பது பழிவாங்கும் சபையாகவும், வடக்கு - கிழக்கு பாதுகாப்பு ஏற்பாடென்பது இளைஞர்களைக் கடத்திச் செல்வதென்பதாகவும் ஒருமாறிப் போயுள்ளன.


வடக்கு - கிழக்கில் விடுதலை இயக்கங்களுக்கிடையே போட்டா போட்டி நிகழ்கின்ற அவ்வேளையில் இதற்குப் பரிகாரம் காணாமல் அமைதியைத் தோற்றுவிப்பதென்பது சாத்தியம் அற்றதாகும்.


இந்த வகை இயக்க விரோதங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகளின் பின்பு உருவாக்கப்பட்ட கசப்பான அனுபவங்களாகும். திம்புப் பேச்சுவார்த்தையின் போது நான்கு அம்சங்களில் இணக்கம் பெற்ற அனைத்து இயக்கங்களும் உறுதியாக நின்று இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தன.


இந்த ஒற்றுமையானது புறசக்திகளின் நலன்களுக்குக் குந்தகமாகத் தோன்றியதன் பின்பே இயக்க மோதல்கள் தூண்டி விடப்பட்டிருந்தன.


இதன் பின்பு இன்றுவரை அந்த முரண்பாடானது வளர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலை மாற இரு அரசுகளும் இன்றைய நிலையில் விடுதலை அமைப்புகளைக் கூறுபோட்டு அணுகுவதைத் தவிர்த்து வடக்கு - கிழக்கில் அமைதி திரும்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இறுதியாகக் கேட்டுக்கொண்டு எமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தும் இவ்வுரையை வழங்கச் சந்தர்ப்பம் அளித்த இந்த அவைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.


வெளியீடு: ஈழவர் ஜனநாயக முன்னணி

"https://ta.wikibooks.org/w/index.php?title=இரத்தினசபாபதி_ஆற்றிய_உரை&oldid=4370" இலிருந்து மீள்விக்கப்பட்டது