இந்தியா: குற்றங்களும் அவற்றிற்கெதிரான சட்டப் பாதுகாப்பும்

உலகில் உள்ள எந்தச் சமூகத்திற்கும் உணவு உடை மற்றும் இருப்பிடம் ஆகியவை அடிப்படைத் தேவைகளே என்றாலும், மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதுவும் ஒரு அடிப்படைத் தேவையே ஆகும். உலகில் பெரும்பாலான நாடுகளில் சட்டத்தின் ஆட்சி நடக்கும் இன்றைய நிலையில், எந்நாட்டிலும், ஆளும் அரசுகள் குற்றங்களுக்கு எதிரான மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் இன்னும் முழுமையடையவில்லை என்ற ஒரு நிலையில் அது- அதாவது மக்களுக்கான குற்றங்களுக்கெதிரான பாதுகாப்பு இந்தியாவில் எப்படி, எந்தெந்தச் சட்டங்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன, அவை எவ்வளவு தொலைவு மக்களுக்கு உண்மையிலேயே பயன் அளிக்கின்றன என்பதை அலசுவதே இந்நூலின் நோக்கமாகும்.

குற்றமற்ற சமுதாயம் நடைமுறையில் இன்னும் எங்கும் பதிவு செய்யப்படவில்லைஎனினும், அப்படி ஒரு குற்றமற்ற சமூகம் ஒன்றுக்கு நடைமுறை வாய்ப்பே இல்லையெனினும், அதற்கான முயற்சிகளை நாம் ஒரு போதும் கைவிடலாகாது என்பதே அனைத்துச் சமூகங்களுக்கும் உள்ள ஒரே தேவையாகும். இது மனித குலத்திற்கு மட்டுமின்றி, விலங்கினங்கள், மரங்கள் காடுகள்- ஏன் மண்ணுக்கும் உள்ள ஒரு தேவையாகும். இப்படிப்பட்ட இன்றியமையாமையுள்ள ஒரு தேவையை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு பெரும்பாலும் தண்டனைச் சட்டங்களையே நம்பி இருக்கிறது.

குற்றமற்ற ஒரு சமூகம் உறுதிசெய்யப்படவேண்டும் என்பது மிக மிக இன்றியமையாத தேவை என்ற நிலையிலும், அதை உறுதி செய்ய தண்டனைச் சட்டங்களையே சார்ந்திருப்பது வரவேற்கத் தக்க நிலை அல்ல என்பதே நடைமுறையில் அனைவரும் கண்ட உண்மையாகும். வாழும் ஒவ்வொரு உயிருக்கும்- ஏன் உயிரற்ற ஒவ்வொன்றிற்கும் எவை இன்றி அவை வழக்கமாக நீடிக்க முடியாதோ- அதாவது ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான அல்லது ஒரு விலங்கு அல்லது தாவரம், இன்னும் சொல்லப்போனால் உயிரற்ற மலை, பாறை, கல், மண் முதலியவற்றிற்கும் பல தேவைகள் உள்ளன. முதன்மையான உரிமைகள் பல உள்ளன.

எதைப் பொது இடங்களில், பொது மக்கள் முன்னிலையில், பலர் அறியும்படி பேசக்கூடாது என்று இத்தனை ஆண்டுகளாக வாய் மூடி இருந்தேனோ அதைப் பேசும்படியான சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது டெல்லியில் கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் நிலை, மற்றும் தமிழகத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த புனிதா என்ற பெண் குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுக் கொலை செய்த நிகழ்வு ஆகியன!

இந்தியாவில் நடைபெறும் அனைத்துக் கொடும் குற்றங்களுக்கும் காரணம் 'அரசியல் அமைப்புச் சட்டத்தை' உருவாக்கும் பொழுது, இந்தியர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஏராளமான முட்டாள்தனமான முடிவுகள் தான் என்பதே உண்மை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் 'தாங்கள் மட்டுமே அறிவாளிகள், தாங்கள் மட்டுமே பொறுப்பு மிக்கவர்கள், தாங்கள் மட்டுமே சீரிய சிந்தனையாளர்கள்', 'மற்ற அனைவரும் அறியாமையில் உழலுபவர்கள், மற்ற அனைவரும் பொறுப்பற்றவர்கள்' என்ற ஆழமான கருத்தை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் அனைத்துச் சமூகக்கேடுகளும் அரங்கேறுகின்றன.

குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கவல்ல நீதிமன்றங்களை 'குற்றவாளிகளின் முகவர்கள் போலச்' செயல்படும்படியே நமது அரசியல் அமைப்புச் சட்டம் வடிவமைத்துள்ளது. ஒரு கடைக்கோடிக் காவல் அலுவலர் விசாரித்துக் கண்டுபிடிக்கும் உண்மையைக்கூட மிகப்பெரிய நீதிமன்றங்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒரு சிறிய குற்றவாளிகூட அந்தக் காவல் அலுவலர் முன்னால் உண்மையைச் சொல்கிறார்.... அதே நேரம் நீதிமன்றத்தில் அவர் உண்மையை மறந்தும் கூடப் பேசுவதில்லை. ஏனென்றால், அந்தக் காவல் அலுவலரிடம் எந்த ஒரு குற்றவாளியும் உண்மையை மறைக்க முடியாது- மறைத்தாலும் அவர் விட மாட்டார்; ஆனால், நீதி மன்றத்தில் 'உண்மையத் தான் பேசுகிறேன்' என்று வாக்களித்துவிட்டுப் பொய் பேசினாலும் அந்த நீதிமன்றத்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. இதுவே நடைமுறை. இதனால் குற்றம் செய்தவர்களில் பலர் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர்- மீண்டும் மீண்டும் குற்றம் செய்கின்றனர்- இவர்களைப் பார்த்து பிறரும் செய்கின்றனர். "சட்டமோ, நீதிமன்றமோ ஒரு குற்றவாளியையும் அப்பாவியையும் தரம் பிரித்துப் பார்க்கும் வல்லமையற்றவையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது".

இதற்கு மேல் அப்பாவிகள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ளோம் என்பதைக் காட்டி, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், "நூறு குற்றவாளிகள் தப்பிவிட்டாலும், ஒரு அப்பாவி தண்டிக்கப்படக்கூடாது" என்ற இன்னொரு கருத்தையும் முன்வைத்தனர். ஏனென்றால் ஒரு குற்றவாளியைத் துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்குமளவிற்கு நமது சட்டங்கள் இல்லை; அதனால் ஒரு அப்பாவி கூட தண்டனை பெரும் சூழ்நிலை இருக்கிறது; எனவே தான் தண்டனை அளிப்பதில் பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இச் சலுகைகள் வாயிலாக பல குற்றவாளிகள் கூட பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம்- ஆனால், ஒரு அப்பாவி கூடப் பாதிக்கப்படக்கூடாது. ஆக, சட்டம்- அதாவது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு அப்பாவி கூடத் தண்டிக்கப்படும் பாவச் செயலில் இருந்து தப்பிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டனர். ஆனால், நடைமுறை என்ன சொல்கிறது என்றால், "நூறு அப்பாவிகள் கூடத் தண்டிக்கப்படலாம், ஆனால் ஒரு குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது; ஏனென்றால் ஒரு குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிவிட்டால் அது ஆயிரம் அப்பாவிகளைத் தண்டிப்பதற்குச் சமம்". இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்!

அண்மையில், அதாவது இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பொள்ளாச்சியில் பலர் முன்னிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு சிறுவனை இன்னொருவன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறான். அதே நபர் அதற்கு முன் இரண்டு மாதங்களுக்கு முன் தான் இன்னொருவரை அதே முறையில் கழுத்தை அறுத்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் வெளியில் விடப்பட்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவனைப் பிணையில் வெளியில் விடாமலிருந்திருந்தால் இன்னொரு உயிர் பலியாகி இருக்காது. அதாவது சட்டமும் நீதிமன்றமும் ஒரு குற்றவாளியின் உரிமையை வழங்குகிறோம் என்ற பெயரில் இன்னொரு மனிதனின் வாழ்வுரிமையைப் பறித்துவிட்டன. இந்தக் கொடுமையை எங்கே சென்று சொல்வது என்று தெரியவில்லை.

அறிவியலால் எப்பொழுது ஒரு மனிதனின் மனத்தை மிகத் துல்லியமாகப் படிக்க முடியுமோ அதுவரை அறிவியல்பூர்வ விசாரணைகள் முழுமையான ஏன்.... சிறிதளவு பயனைக்கூட நல்காது. அறிவியல் பூர்வ விசாரணைகள் உண்மையை வெளிக்கொணருவதில் பல நேரங்களில் முழுமையாகத் தோற்றுவிடுவதாலேயே பல வழக்குகள் எந்தவித முன்னேற்றமும் இன்றித் தவிக்கின்றன; பல குற்றவாளிகள் சிறைக்குள் இல்லாமல் வெளியே திரிகின்றனர். இதுவே குற்றங்கள் பெருகுவதற்கு முழு முதல் காரணம் என்பதை சட்டமும் நீதிமன்றமும் முதலில் உணரவேண்டும்.