அறிவுச்செல்வம்

2009 சூன் முதல் வேலை செய்ய துவங்கி இன்றோடு ஒரு ஆண்டு காலம் நிறைவடைகிறது.. இந்த ஓராண்டு காலத்தில் நான் கற்றுக்கொண்டவைகள் பல.. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஒரு பாடத்தை கற்பித்துவிட்டு போவதால், அவர்கள் அனைவருமே நமக்கு ஒரு வகையில் ஆசான் என சொல்வதுண்டு..

அப்படி எனக்கு பல விஷயங்களில் ஆசானாய் திகழ்ந்த ஒரு நல்ல மனிதர் என் இனிய தோழர் திரு.அறிவுசெல்வம் அவர்கள்..

“நல்ல பகுத்தறிவும், மாறா ஒழுக்கமும் ஒரு மனிதனிடம் இருந்தால் அவன் எதற்காகவும் பயம் கொள்ளத் தேவை இல்லை”

“எதைச் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என சுய அறிவோடு மனிதன் சிந்தனை செய்து செயல்பட்டால், சமுதாயம் முன்னேறிவிடும்..”

-இவை இரண்டும் இந்த ஓராண்டு காலத்தில் அவர் அதிகம் பயன்படுத்தியது..

பகுத்தறிவு கொள்கைகளைப் பற்றி பல பேர் பேசி கேட்டிருந்தாலும் அவை என்னை சிந்தனை செய்ய தூண்டியது இல்லை.. ஆனால் இவரின் பேச்சு நிறைய சிந்தனை செய்ய வைத்திருக்கிறது.. என் பழைய செயல்பாடுகளைக் கூட சரி எது தவறு எது என பட்டிமன்றம் நடத்த வைத்திருக்கிறது.. பெரியாரின் கொள்கைகளை ஏட்டில் மட்டும் படித்த காலம் போய் அவரின் சிற்சில(ஆனால் மிகப் பெரிய) விஷயங்களை (உ.ம்: பொட்டுகட்டுதல், தீட்டு கழித்தல்) அவர் கூற கேட்டபோது பகுத்தறிவை நோக்கி நான் இன்னும் பயணிக்கவில்லையோ என யொசிக்க வைத்திருக்கிறது..

அது ஒரு காலைப் பொழுது.. கொத்தாம்பாடியின் ஒரு தேனீர் கடையில் தேனீரும், வடையும் எடுத்துக்கொண்டு ஏதோ பேசி கொண்டிருந்தோம்.. அக்கடையில் மாட்டி வைத்திருந்த ஒரு விவசாயம் சார்ந்த நூலைப் பார்த்து இவர் “ஐயா, இது மாதிரியான நூல்கள் எல்லாம் இங்க விற்பனை ஆகுதா..? விவசாயத்தை சார்ந்த நூல்களை இங்கு வாங்குறாங்க என்பது மகிழ்ச்சியான செய்தி ஐயா” என்றார்..

அந்த தேனீர் கடைக்காரர் உடனே ”நீங்கள் தமிழ் ஆசிரியரா..?” என்றார்...

அந்த அளவு இருந்தது அவரது பிறமொழி கலப்பில்லாத பேச்சு. இன, மொழி உணர்வு மிக்க ஒரு மனிதராக அவரை நான் காணத்தவறியது இல்லை. இத்தனைக்கும் இவர் ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியர்..

பகுத்தறிவை மாணவர்களிடம் கொண்டு சென்ற பெருமையும் இவரைச் சாரும்..

இன்றும் என் அலைபேசி அழைக்கும் போதும், இயல்பாய் பேசும் போதும் முடிந்த அளவு தமிழில் பேச துவங்கியுள்ளேன்.. இது அனிச்சையாய் அவருடன் நன்கு பழகுதலினால் ஏற்பட்ட பெரிய மாற்றம்..

இனி தினம் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான் என்றாலும், அவருடனான இந்த ஒரு வருட வாழ்வில் நான் கற்றது மிகுதி.. என்னில் பல மாற்றங்களை விளைவித்து, என் சிந்தனைகளை மெருகேற்றிய என் அருமைத் தோழரும் என்னை செதுக்கிய ஒரு உளிதான்...!

"https://ta.wikibooks.org/w/index.php?title=அறிவுச்செல்வம்&oldid=5387" இலிருந்து மீள்விக்கப்பட்டது