அச்சப் பத்து/உரை 9-12

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்

என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற

என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா

அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பதப்பொருள் :

வன்புலால் வேலும் அஞ்சேன் - வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக்கும் அஞ்ச மாட்டேன்; வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் - வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன், என்பு எலாம் உருக நோக்கி - எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து, அம்பலத்து ஆடுகின்ற - பொன்னம்பலத்தில் நடிக்கின்ற, என் பொலாமணியை ஏத்தி - எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து, அருள் இனிது பருகமாட்டா - அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு இலாதவரைக் கண்டால் - அன்பற்றவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் :

'காலனைக் கடிந்து காமனை எரித்த பெருமானது அடியார்க்குக் கொடிய வேலும் மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார், 'வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார். 'ஆனால், அம்பலத்தாடும் பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார், 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

இதனால், இறைவனது அருள் நடனத்தைக் கண்டு இன்புறுவதே மனிதப்பிறவியின் பயன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து/உரை_9-12&oldid=2392" இலிருந்து மீள்விக்கப்பட்டது