அச்சப் பத்து/உரை 29-32
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பதப்பொருள் :
தறிசெறி - கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும், களிறும் அஞ்சேன் - ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன்; தழல் விழி - நெருப்புப் போன்ற கண்களையுடைய, உழுவை அஞ்சேன் - புலிக்கும் அஞ்சமாட்டேன்; வெறி கமழ் - மணம் வீசுகின்ற, சடையன் - சடையையுடையவனும், அப்பன் - தந்தையுமாகிய இறைவனது, விண்ணவர் நண்ணமாட்டா - தேவர்களாலும் அடைய முடியாத, செறிதரு - நெருங்கிய, கழல்கள் ஏத்தி - கழலணிந்த திருவடிகளைத் துதித்து, சிறந்து - சிறப்புற்று, இனிது இருக்க மாட்டா - இன்பமாக இருக்க மாட்டாத, அறிவிலாதவரைக் கண்டால் - அறிவிலிகளைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
விளக்கம் :
மலையே வந்து வீழினும் நிலையினின்று கலங்காத உள்ளம் உடைய அடியவர்களைக் கொலை யானை முதலிய கொடிய விலங்குகள் வணங்கிச் செல்லுமாதலின், 'தறி செறு களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்' என்றார். அமணர்களால் ஏவப்பட்ட மதயானை திருநாவுக்கரசரை வலம் வந்து வணங்கிச் சென்றதைக் காண்க. ஆனால், அஞ்சத் தக்கவர் யார் எனின், அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கி இன்புறும் தன்மை இல்லாத அறிவிலிகளேயாவர் என்க.
இதனால், சிவபெருமானை ஏத்தி வழிபடுவதே அறிவுடைமையாகும் என்பது கூறப்பட்டது.