அச்சப் பத்து/உரை 21-24
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரன் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பதப்பொருள் :
வாள் உலாம் - ஒளி வீசுகின்ற, எரியும் அஞ்சேன் - நெருப்புக்கும் அஞ்ச மாட்டேன்; வரை - மலை, புரண்டிடினும் அஞ்சேன் - தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன்; தோள் உலாம் நீற்றன் - தோல்களில் விளங்குகின்ற திரு வெண்ணீற்றையுடையவனும், ஏற்றன் - காளையை ஊர்தியாக உடையவனும், சொல் பதம் கடந்த அப்பன் - சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது, தாள் தாமரைகள் - திருவடித் தாமரைகளை, ஏத்தி - துதித்து, தடமலர் புனைந்து - பெருமை பொருந்திய மலர்களைச் சாத்தி, நையும் - மனம் உருகுகின்ற, ஆள் அலாதவரைக் கண்டால் - அடிமைகள் அல்லாதவர்களைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
விளக்கம் :
கையில் அனலேந்தி எரியாடுபவனும் என்றும் அழிவில்லாதவனுமாகிய பெருமானுக்கு ஆட்பட்ட அடியார்கள் நெருப்பிற்கும் உலகத்தின் அழிவிற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்பதாம். அத்தகைய இறைவனை மலர்தூவி வழிபடாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தடமலர் புனைந்து நையும் ஆளலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.
இதனால், சிவபெருமானை மலர் தூவி வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.