(தில்லையில் அருளியது)

இறைவனது திருவருள் நெறிக்குப் புறம்பானவற்றைக் கண்டு அஞ்சிப் பாடியது ஆதலால், அச்சப் பத்து எனப்பட்டது. 'தீயவை தீய பயத்தலால' அச்சம் உண்டாயிற்று என்க.

ஆனந்தமுறுதல்

இஃது இன்பம் பெறுதல் என்னும் பொருளதாம். இறைவனது திருவருள் இறவா இன்பம் நல்கும் என்க.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்


புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன்

கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பதப்பொருள் :

புற்றில் - புற்றிலேயுள்ள, வாள் அரவும் - கொடிய பாம்புக்கும், அஞ்சேன் - அஞ்சமாட்டேன்; பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் - பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்சமாட்டேன்; கற்றை வார்சடை - திரட்சியான நீண்ட சடையையுடைய, எம் அண்ணல் - எம் பெரியோனாகிய, கண்ணுதல் - நெற்றிக்கண்ணையுடைய இறைவனது, பாதம் நண்ணி - திருவடியை அடைந்தும், மற்றும் ஓர் தெய்வம் தன்னை - வேறொரு தெய்வத்தை, உண்டு என நினைந்து - இருப்பதாக எண்ணி, எம் பெம்மான் கற்றிலாதவரை - எம்பெருமானைப் போற்றாதாரை, கண்டால் - காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்கின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் :

பொய்யர்தம் மெய் என்பது வஞ்சனையாம். அரவத்தையே அணியாகப் பூண்டு, ஞானத்தையே கண்ணாகக் கொண்டு உள்ள இறைவன் அடியார், புற்றில்வாழ் அரவத்தையும் பொய்யர்தம் மெய்யையும் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை. ஆனால், இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கின்றார். பெம்மானைக் கற்றலாவது, பெருமானது நல்ல புகழைப் போற்றுதலாம். 'எம் பெம்மாற்கு அற்றிலாதவரை' எனப் பிரித்து, எம் இறைவன்பொருட்டுப் பிற பற்றுகள் நீங்காதவரை என்றும் பொருள் கூறலாம்.

இதனால், சிவபெருமானுக்கு அடியவராயினார் பிற தெய்வங்களை வணங்குதல் பொருந்துவது அன்று என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து/உரை_1-4&oldid=2390" இலிருந்து மீள்விக்கப்பட்டது