அகரமுதலியியல் குறித்த உரசல்கள்/தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம்

தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம்
மா. சற்குணம், வியாழன் 21, ஏப்ரல், 2011

தமிழில் தோன்றிய கருவி நூல்களாகிய நிகண்டுகள் என்பவையே அகராதிகளுக்கு ஆதார நூல்களாக அமைந்தன. தமிழ் நிகண்டுகளில் சில அச்சாகாமற் போக, அச்சிடப்பட்டவற்றுள்ளும் சில எங்கும் கிடைக்காத அளவிற்கு அருகிப் போய்விட்டன. சில நிகண்டுகள் மட்டுமே பல முறை பதிப்பிக்கப் பெறுதற்குரிய பேறு பெற்றன. அவை குறித்த ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரை.
இந்திய மொழிகள் சிலவற்றுள் அகராதி வடிவில் செய்யப் பெற்ற நூல்களும் நிகண்டுகள் எனும் பெயர் பெற்றுள்ளன. எனினும் செய்யுள் வடிவில் இயற்றப் பெற்றனவே தமிழ் நிகண்டுகள். உ.வே.சா. நூல் நிலையம் 1983இல் வெளியிட்ட அகராதி நிகண்டு என்னும் நூல் மட்டும் அகராதி வடிவில் அமைந்துள்ளது. தமிழில் மொழி நோக்கிலன்றி மருத்துவம், சோதிடம் போன்ற துறைகளிலும் நிகண்டுகள் தோன்றியுள்ளன.
மொழி சார்ந்த நிலையில் 25 நிகண்டுகள் பதிப்பிக்கப் பெற்றன. இப்பணி 1819 முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. இத்துறையில் சேந்தன் திவாகரம், பிங்கலந்தை, உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகியன மட்டும் பல பதிப்புகளைப் பெற்றன. பெரும்பாலானவை ஒருமுறை மட்டும் பதிப்பிக்கப் பெற்றன. அண்மையில் பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியன் மெய்யப்பன் தமிழ் ஆய்வகம் வழி வெளியிட்ட பெருநூல் பல நிகண்டுகளுக்கு மறுபதிப்பாக வாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
பதிப்பிக்கப் பெற்ற நிகண்டுகளில் (காண்க: இணைப்பு) சென்ற 19ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே அச்சான கந்தசுவாமியம், சிந்தாமணி நிகண்டு, நேர்ச்சொல் நிகண்டு, நவமணிக்காரிகை, அபிதான தனிச் செய்யுள் நிகண்டு ஆகியன கிடைத்தற்கரியனவாய் உள.

அகராதிப் பணியில் -வரலாற்றுப் பேரகராதித் தொகுப்புப் பணியில் இப்பதிப்புகளைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. நிகண்டு பதிப்பித்தோருள் வையாபுரிப் பிள்ளை முதலிய மிகச் சிலரே சரியான பதிப்பு நியதிகளைப் பின்பற்றியுள்ளனர். மிகப் பெரும்பாலோர் தம் மனம் போன போக்கில் நிகண்டுகளைப் பதிப்பித்துள்ளதால் நிகண்டுப் பதிப்புகளில் பலவகைப் பிழைகள் நேர்ந்துள்ளன. இப்பிழைகளைக் கண்டறிந்து நீக்குவது முதன்மைத் தேவையாகும்.

தமிழ் நிகண்டுகளுள் மிகுதியும் போற்றப் பெற்றவை சேந்தன் திவாகரம், பிங்கலந்தை ஆகியனவும், சிறப்பாகச் சூடாமணி நிகண்டும் ஆகும். இவற்றின் பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகள் குறிப்பாக ஈண்டு சுட்டத்தக்கன.

தாண்டவராய முதலியார் 1835இல் சேந்தன் திவாகரத்தின் சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பிழை நீக்கி பதிப்பிக்கத் துணிந்தா£¢. ஆயினும் அவர் முதல் எட்டு தொகுதிகளை மட்டுமே பதிப்பித்தார். அவற்றுள் சில பகுதிகளில் சில சூத்திரங்களைத் தாமே இயற்றியும் சேர்க்கலானார். செயற்கை வடிவப் பெயர்த் தொகுதியில் அவர் சேர்த்த சூத்திரங்களின் எண்ணிக்கை பிற தொகுதிகளைக் காட்டிலும் சற்று மிகுதி. எனினும், அவர் செய்த ஒரு நற்செயல், தாம் எழுதிச் சேர்த்த நூற்பாக்களை உடுக்குறியிட்டுக் காட்டினார்.

1839இல் பு. நயனப்ப முதலியார் திவாகரத்தின் முதல் பத்து தொகுதிகளைப் பதிப்பித்தார். அவர் தம் பதிப்பின் முன்னுரையில் “புத்தகங்கள் தோறும் ஒன்றற்கொன்று ஒவ்வாது வழுக்களாற் பொதிவுற்றுக் கிடந்தமையைச்’’ சுட்டிக்காட்டி-யுள்ளார்.

பின் வந்த, திவாகர நிகண்டின் பதிப்புகள் பலவும் தாண்டவராய முதலியாரின் பதிப்பையட்டியே பெரும்பாலும் அமைந்தன. எனினும் அவற்றுள் அவர் இயற்றிச் சேர்த்த சூத்திரங்கள் உடுக்குறியிட்டு வேறுபடுத்திக் காட்டப் பெறவில்லை. எனவே திவாகரர் செய்த நூற்பாக்களும், பதிப்பாசிரியர் செய்த நூற்பாக்களும் பிரித்தறியவியலா நிலை ஏற்பட்டது.

மேலும் திவாகரத்தின் 11ஆம் தொகுதியைப் பதிப்பித்தோர் சூத்திரங்களைத் திவாகரர் அமைத்த முறைப்படி அச்சிடாது, ஆதியிற் பொருள், அந்தத்துப் பொருள் என இரு பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் உள்ள சூத்திரங்-களை அகர நிரலில் அமைத்துப் பதிப்பித்-துள்ளனர். எனினும் ஏட்டுச்சுவடிகள் சிலவற்றி-லேயே இம்முறை புகுத்தப் பெற்றுவிட்டது எனக் கருதுவர் வையாப்புரிப்பிள்ளை.

திவாகரப் பதிப்புகளில் சொற்கள் பல விடுபட்டுள்ளன. தாண்டவராய முதலியா£¢ முதலில் பதிப்பித்தபோதே ஏடுகள் சில விடுபட்டு விட்டமையால் இந்நிலை நேர்ந்-திருக்கக் கூடும் எனக் கருதுகிறா£¢ மு. அருணாசலம். திவாகரத்திற்கு நாற்பதுக்கும் மேலான பதிப்புகள் வெளிவந்திருப்பினும் மேலே குறிப்பிடப் பெற்ற இத்தகைய சில பிழைகள் இருக்கத்தான் செய்தன. எனினும் இதனைச் செப்பம் செய்யும் முயற்சியில் எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு குறிப்பிடத்தக்கது.

பிங்கல நிகண்டு முதன்-முதலாகக் கி.பி.1890ஆம் ஆண்டில் சிவன் பிள்ளை என்பவரால் பதிப்பிக்கப் பெற்றது. இப்பதிப்பில் அந்-நிகண்டின் பத்தாம் தொகுதி-யில் உள்ள நூற்பாக்கள் பிங்கலர் அமைத்த முறையி-லன்றி அகராதி முறையில் மாற்றிப் பதிப்பிக்கப் பெற்றன. தமக்குக் கிடைத்த பிங்கலந்தையின் சுவடிகள் ஒன்றிலேனும் இம்முறையில் நூற்பாக்கள் காணப் பெறவில்லை என்பார் வையாபுரிப் பிள்ளை. பின்வந்த பதிப்புகள் யாவும் முதற்பதிப்பின் மறுவெளியீடாகவே அமைந்தன.

சூடாமணி நிகண்டு, 1835 தொடங்கி 1985 வரையிலான 150 ஆண்டுகால இடைவெளியில் 150 முறைகளுக்கு மேலாக அச்சிடப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்நிகண்டுப் பதிப்பிலும் சில குறைபாடுகள் இருந்தமையைப் பலரும் சுட்டிச் சென்றுள்ளனர். 1839இல் தாண்டவராய முதலியார் பதிப்பின் முதற்-பக்கத்தில் அதனை வெளியிட நேர்ந்தமைக்கான காரணம் கீழ்வருமாறு தரப்பெற்றுள்ளது.
“பள்ளிப் பாடமாக வழங்குதல் பற்றி ஒன்றற்கொன்று ஒவ்வாமற் பல்வகைப்படச் சிதைந்தும் பிறழ்ந்தும் பிற்படச் சில பெயரும் செய்யுளும் அவரவர்க்குத் தோன்றியவாறு சேர்க்கப்பட்டு மிக வழுவுற்றிருத்தலால் அம்பிகைகளைக் களைவதில் உழப்புற்று அத்துகள்களை ஒருவாற்றாற் களைந்து தூயதாகவும் மற்றும் பெயர்களைப் பிரித்து எல்லார்க்கும் எளிதிற் பயன்படுமாறும் பதிப்பிக்கப் பெற்றது.’’
இதிலிருந்தே இதன் சுவடிகளில் மலிந்திருந்த பிழைகளின் மிகுதியை நன்கு உணரலாம்.

1839ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் 11ஆம் தொகுதிக்குப் புதுவை வேதகிரி முதலியாரின் பதிப்பு வெளிவந்தது. சூடாமணி நிகண்டின் 11ஆம் தொகுதியில் இருந்த 310 செய்யுட்களுடன் வேதகிரி முதலியார் 90 செய்யுட்களை இயற்றி இடையிடையே சேர்த்து இதனை ‘ஒரு சொல் பல்பொருள் தொகுதி நானூறு பாடல் மூலமும் உரையும்’ எனும் பெயரில் அச்சிட்டார்.
சூடாமணியின் ‘ஒருசொல் பல்பொருள் தொகுதி’ நிகண்டு எனும் பெயரில் 1843இல் இலங்கையில் யாழ்ப்பாணத்து புத்தகச் சங்கத்தாரால் வெளியிட்டு வைக்கப் பெற்றது. எனினும் இஃது சூடாமணியின் பதினோராம் தொகுதி போல் ஏறத்தாழ இருமடங்கு செய்யுட்களைக் கொண்டதாக அமைந்தது. களத்தூர் வேதகிரி முதலியார் சூடாமணியின் 310 செய்யுட்களுடன் புதிதாகத் தாம் இயற்றி¢ச் சேர்த்த 273 செய்யுட்களையும் கொண்டதாக 583 செய்யுட்களுடன் கூடிய பெருநூலாக மாற்றியமைத்தார். அதன் நோக்கம் கீழ்க்காணுமாறு முகப்பு ஏட்டில் குறிக்கப் பெற்றுள்ளது.

“இஃது வீரைமண்டலவன் நிகண்டினுள் அடங்காத பொருள்கள் பற்பல நிகண்டகராதி-களுட் காணப்பட்டனவற்றினுட் கற்போர்க்கு உபயோகமானவற்றையும் அந்நிகண்டின் ஒரு சொற் பல பொருட் டொகுதியுட் சேர்த்து. . . வேதகிரி முதலியார் என்பார் இயற்றிய சில செய்யுட்களையும் கோத்துக் கற்போர் எளிதிற் கற்க ஒரு வழியாய். . . பிரசித்தம் செய்யப்-பட்டது.’’
இஃது பிற்காலத்தில் ‘வேதகிரியார் சூடாமணி’ எனும் தனிப்பெயர் பெற்று விளங்கலாயிற்று.

1897இல் சூடாமணியின் 11ஆம் தொகுதிக்குத் திருமழிசை சிவப்பிரகாச ஐயர் பரிசோதித்து, ஆனூர் எத்திராஜ முதலியார் அச்சிட்ட பதிப்பு ஒன்று வெளிவந்தது. அதன் நூன்முகம், அக்காலத்திய பிற பதிப்புகள் குறித்துக் கீழ்வருமாறு அறிவிக்கிறது:“பதினோராவது நிகண்டை இதுகாறும் பற்பலர் அச்சிட்டாரேனும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், புதுவை நயனப்ப முதலியார் முதலிய இரண்டொருவர் அச்சிட்ட பிரதிகளேயன்றி ஏனையோர் அச்சிட்ட பிரதிகளனைத்தும் பற்பல பாட பேதங்களும் சொற்பிழை எழுத்துப் பிழைகளும் செறிதரப் பெற்று நின்றன.’’
“தற்காலம், திருவெண்காடு ஆறுமுக சுவாமிகள், மதுரை சொக்கலிங்க சுவாமிகள், திருப்போரூர் சுப்பிரமணிய சுவாமிகள் முதலிய பதிப்பெயர் நாட்டிச் சில ஆசாமிகள் பதிப்பித்த வேறுபல பதிப்புகள் வெளிப்பட்டுளவேனும் அப்புத்தகங்களை வாங்கிப் படிக்க முயலும் ஒவ்வொருவரும் வாசியாமலேயிருப்பர்களாயின் கூடியவரையில் புத்திமான்களாகவே எண்ணப்படுவார்கள்.’’

பொருட்டொகை நிகண்டு 1920ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளிவந்தது. அதன் பதிப்பாசிரியர் சே.ரா. சுப்பிரமணிய கவிராயர் என்பார் ஆவார். அப்பதிப்பின் முகப்பு ஏட்டில் அவர் அது, திருத்தியும், விளக்கியும் கூட்டியும் செய்யப் பெற்றது எனக் குறிக்கப் பெற்றுள்ளது. அப்பதிப்பிற்கு 878 சூத்திரங்களே சுவடியில் கிடைத்துள்ளன. பின்னர் பதிப்பாசிரியர் 122 சூத்திரங்களைப் புதிதாகச் செய்து சேர்த்துள்ளார். எனினும் மூலச் சுவடியில் இருந்தவை எவை, பதிப்பாசிரியர் எழுதிச் சேர்த்தவை எவை எனத் தெளிவாய் அறிதற்கியலவில்லை.

1983இல் வடமலை நிகண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக அச்சிடப் பெற்றது. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தா£¢. வையாபுரிப் பிள்ளை அவர்கள் 1465 நூற்பாக்களை உடையது எனச் சுட்டிய பல்பொருட் சூடாமணியின் இரண்டாம் காண்டமே வடமலை நிகண்டாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஆயினும் அச்சான இந்நிகண்டில் 1452 நூற்பாக்களே உள்ளன. மொழி முதல் எழுத்துகளின் வர்க்க நிரல்படி அமைந்துள்ள நூற்பாக்களில் பகர வர்க்கத்தில் பீ, பு, பூ, பெ, பே ஆகிய எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களுக்கான நூற்பாக்கள் விடுபட்டுள்ளன. 13 நூற்பாக்கள் விடுபட்-டுள்ளமை இச்சொற்களுக்குரியன போலும். இவை பற்றிப் பதிப்பில் யாதொரு குறிப்பும் தரப் பெறவில்லை.

நிகண்டுப் பதிப்புகளுள் பன்னிரண்டு நிகண்டுகள் மூலம் மட்டும் உள்ளவையாக அச்சிடப் பெற்றன. பத்து நிகண்டுகள் மூலமும் உரையும் கலந்த பதிப்புகளாக வெளிவந்துள்ளன. சூடாமணி நிகண்டு அன்றைய தமிழ்க் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருந்தது என்பதை, அந்நூல் 150 ஆண்டுகளில் 150 முறைக்கு மேல் அச்சிடப் பெற்றமை கொண்டு எளிதில் அறியலாம். அதன் விருத்த யாப்பு மனனம் செய்வதற்கு ஏனையவற்றைவிட எளிதாய் இருந்திருக்கும் எனக் கருதலாம். அச்சான நிகண்டுகளுள் ஆறு நூல்கள் அவற்றை இயற்றியோரால் பதிப்பிக்கப் பெற்றன. செப்பமான நிகண்டுப் பதிப்புகளைத் தந்தோராக வையாபுரிப் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். அவர் நான்கு நிகண்டுகளைப் பதிப¢பு நியதிகளுடன் பதிப்பித்தார். உரைப் பதிப்புகளில் ஆறுமுக நாவலர், புதுவை நயனப்ப முதலியார், அனவரத விநாயகம் பிள்ளை ஆகியோர் குறிக்கத் தக்கவர்கள்.

தமிழ் நிகண்டுகளுக்கு வந்த உரைப் பதிப்புகளைக் கீழ்வருமாறு பகுத்து நோக்க இடம் உள்ளது:
வீ. உரைப் பதிப்புகள்
வீவீ. உரையுடன் பெயர்ப்பொருள் விளக்கப் பதிப்புகள்
வீவீவீ. பிற நிகண்டுகளுடன் சொற்பொருள் ஒப்பீட்டுப் பதிப்புகள்
வீஸ். உரை மேற்கோள் பதிப்புகள்
ஸ். சுவடி வேறுபாடுகளும் பாட வேறுபாடுகளும் தரப் பெற்ற பதிப்புகள்
மேலும், சில நிகண்டுகளின் பதிப்பில் முதற்குறிப்பு அகரவரிசை, முதல் பத்து தொகுதிகளுக்கான பொருளடைவு, 11ஆம் தொகுதியின் பெயரகராதி ஆகியவற்றையும் காண்கிறோம்.

நிகண்டு நூல்களின் அச்சுப் புத்தகங்களின் வழி அன்றைய எழுத்துருக்களின் தோற்றம், அச்சிடப் பெற்ற முறைகள் போன்றனவும் வெளிப்படுகின்றன. கிடைக்கின்ற நிகண்டுச் சுவடிகளுடன் ஒப்பு நோக்கி, அச்சான நிகண்டுகளை மூலம் சிதையாமல் மீட்டுரு-வாக்கம் செய்து பதிப்பதுடன், இன்னும் அச்சு வாகனம் ஏறாது சுவடிகளாகவே உள்ளவற்றைப் பாதுகாத்து, விரைந்து அச்சிட வேண்டுவதும் இன்று நம் முன் உள்ள தலையாய கடமை யாகும்.